குடிகெடுக்கும் திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.!
டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழியைப் போராட்டம் நடத்த வரும்படி தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட தளர்வு காரணமாக, மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க உத்தரவிட்டார். இதை திமுக மிகக் கடுமையாக விமர்சித்தது. டாஸ்மாக் திறந்ததற்கு எதிராக அவரவர் வீட்டுக்கு முன் நின்று கருப்புக்கொடி போராட்டம் நடத்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மு.க.ஸ்டாலின், உதயநிதி, மனைவி துர்கா சகிதம் வீட்டு வாசப்படியில் போராட்டம் நடத்தினார் மு.க.ஸ்டாலின்.
இதேபோல திமுக எம்.பி. கனிமொழியும் போராட்டம் நடத்தினார். அதுகுறித்து படங்களை 2020 மே 7 அன்று தனது ட்விட்டர் பக்கத்திலும் கனிமொழி பதிவிட்டார். அதில், “மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தபோது..’’என்று பதிவிட்டு, #குடியைக்கெடுக்கும்அதிமுக #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹேஸ்டேக்குகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.
தற்போது அதேபோன்றதொரு சூழலில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க ஸ்டாலின் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை பாஜகவினர் மிகக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் கனிமொழி சென்ற ஆண்டு பதிவிட்டதை கையில் எடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அதுதொடர்பாக ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், “தற்போதைய திமுக ஆட்சியில், கொரோனா ஊரடங்கில் தளர்வாக டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், ‘நாளை இதே போன்ற ஒரு போராட்டத்தை தமிழக அரசை எதிர்த்து நடத்துங்கள். உங்கள் தலைமையில் நான் பங்கு பெறுகிறேன். தலைப்பு உங்களுடையதே!’’ என்று கடுமையாக கனிமொழியை விமர்சனம் செய்திருக்கிறார் நாராயணன் திருப்பதி.
மேலும் கனிமொழி சென்ற ஆண்டு #குடியைக்கெடுக்கும்அதிமுக , #குடிகெடுக்கும்எடப்பாடி என்ற ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தியதுபோல, #குடியைக்கெடுக்கும்திமுக , #குடிகெடுக்கும்ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக்குகளையும் நாராயணன் திருப்பதி பகிர்ந்துள்ளார்.