தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக கடுமையான விளைவுகளை சந்திக்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து வந்ததுமே பொருளாதார மந்த சிலை குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். 

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான ரகுபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கே முரணானது. மத்திய அரசு இதற்கு பதிலாக எல்லா நாடுகளிலும் உள்ளது போல முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும். 

அதிலுள்ள பல மரபுகளை ஆராய்ந்து, நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து அகதிகள் சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு பதிலாக சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை என்ற தவறான சட்டத்தை அரசு கொண்டு வருகிறது.

கிட்டத்தட்ட 1600 கோடி ரூபாய் அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிப்பதற்காக மத்திய அரசு செலவு செய்தது. அதனை அசாம் அரசு நிராகரித்ததால் 1600 கோடி ரூபாய் வீணானது. அப்போது நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை, முரட்டு பெரும்பான்மையை வைத்து இந்தச் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால் தவறு. அதற்காக பாஜக கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.