தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாமல் சவாலாக விளங்கும் இரு மாநிலங்கள் கேரளாவும், தமிழகமும் ஆகும்.

கேரளாவில், இடதுசாரிகளும், காங்கிரசும் மிக வலுவாக உள்ளதால், அங்கு தடம் பதிக்க, பாதை தெரியாமல் தவிக்கிறது பாஜக.

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக-திமுக என்ற பலமான இரு கட்சிகளையும் உடைக்கும் பணியில், ஆரம்ப கட்ட வெற்றியை பார்த்து விட்டது.

ஆனாலும், இரண்டு கட்சிகள் உடைந்து பலவீனப்பட்டாலும், அந்த இடத்தை பாஜக கைப்பற்ற முடியுமா? என்பது கேள்விக்குறியே.

எனவே, முன்னணி தமிழ்  நடிகர்களை, பாஜக வுக்கு இழுத்து அதன் மூலம், தமிழகத்தில் கால் பாதிக்கலாம் என்பதே அதன் திட்டம்.

அதற்காக, ரஜினி, கமல், விஷால் ஆகிய மூன்று நடிகர்களை தேர்வு செய்தது பாஜக.

ரஜினியோ, கமலோ நழுவினாலும், விஷாலை அந்த இடத்தில் வைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டு, காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி பெற்றதற்கு, பின்னணியில் பாஜக வே முக்கிய பங்காற்றியதாகவும், கமலும், ரஜினியும் அதற்கு உறுதுணையாக இருந்ததாகவும், சினிமா துறையை சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

அடுத்த கட்டமாக, தமிழ் உணர்வு இல்லாத தமிழ் நடிகர்கள், மற்ற மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் நடிகர்கள், போன்றவர்களை பாஜகவில் இணைத்து தமிழக தேர்தலை சந்திப்பதே அக்கட்சியின் திட்டம்.

அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஜினி மற்றும் கமலின் ஆதரவு இருக்கும். அதன் ஒரு பகுதியாகவே, டெல்லியில் மத்திய அமைச்சர் பொன்னார்-கமல் சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.