திருப்பதி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருப்பதி சென்றார். செல்லும் வழியில் திருவள்ளூர் அருகே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரக்கோணத்தில் தேர்தல் விரோதமாக நடந்த இரட்டை படுகொலை நடந்திருக்கக் கூடாத ஒரு சம்பவம். இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறப்போவது உறுதி. அடுத்த ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணிதான் அமைக்கும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று எல்.முருகன் தெரிவித்தார்.