ஜெயலலிதா மரணத்துக்கு பா.ஜ.க.வும் காரணம்: சிறையில் சசிகலா பற்ற வைத்த புது நெருப்பு

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. விரைவில் இணைய இருக்கிறது! எனும் பேச்சு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதிலும் தினகரனை தவிர்த்து அ.ம.மு.க.வினர்தான் இதில் ஓவர் ஆர்வமாக உள்ளனர்! என்றும் பேசப்படுகிறது.  இந்நிலையில், சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தனர். தினகரனும் அவரது ஆதரவு மாஜி எம்.எல்.ஏ.க்களும். அப்போது ‘இணையலாமா?’ என்று சசியை நோக்கி ஒரு கேள்வி வைக்கப்பட்ட போது ஓவர் உக்கிரமாகிவிட்டார் என்கிறார்கள் உள் விபரத்தை விரிவாக அறிந்தவர்கள். 

இது பற்றி விரிவாக பேசும் அவர்கள்....” அ.தி.மு.க.வுடன் இணைவதை சசிகலா விரும்பவில்லை. அதற்கான மிக முக்கிய காரணம், பி.ஜே.பி.யின் அடிவருடியாக அ.தி.மு.க. இருப்பதுதான்! என்றிருக்கிறார். பி.ஜே.பி., சொத்துக் குவிப்பு வழக்கினை வைத்து ஜெயலலிதாவை எப்படியாவது நசுக்கி அழிக்க நினைத்ததாகவும், அதனல் கடைசி நாள் வரை அக்கட்சியை ஜெயலலிதா வெறுத்து ஒதுக்கியதாகவும் சசி பகீர் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். 

ஒரு கட்டத்தில் ஓவராக உணர்ச்சிவசப்பட்ட சசிகலா...”பி.ஜே.பி.யில உள்ள எல்லா தலைவர்களுமே அக்காவுக்கு (ஜெ.,) எதிரிகளா இல்லை. ஒண்ணு ரெண்டு முக்கியமானவங்க அக்காவுக்கு ஆதரவாளிகளா இருந்தாங்க. அவங்களில் ஒருத்தர் ஒரு நாள் அக்காட்ட ‘சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு தீர்ப்பு உங்களுக்கு எதிராகதான் இருக்க போவுது. உங்களை சில வருடங்கள் சிறைக்குள்ளே வைக்க திட்டமிடுறாங்க.’ அப்படின்னு ஒரு தகவலை சொன்னார். அதைக் கேட்டு ஏக பதட்டமானவங்க அப்படியே சரிஞ்சு  உட்கார்ந்துட்டாங்க. மறுபடியும் ஜெயில் வாழ்க்கையா? அதுவும் வருடக்கணக்குல!ன்னு பதறி வியர்த்துக் கொட்டியது. இதுல ஏற்கனவே உடல் நிலை சரியில்லாம இருந்த பிரச்னையும் சேர்ந்து கொண்டு அக்காவை அப்படியே அமுக்கிடுச்சு. 

அந்த நாள் எது தெரியுமா? அக்காவை அப்பல்லோவுக்கு கொண்டு போனோமே அதே நாள்தான். அக்காவுக்கு அப்படியொரு சீரியஸ் கண்டிஷனை கொண்டு வந்ததே பி.ஜே.பி.தான். அந்த கட்சி கூட கூட்டணிக்கு தயாரா இருக்குது இந்த ஆளும் தரப்பு. இவங்க கூட நாம இணையுறதா? இந்த சூழல் மாறும் வரைக்கும் இணைப்பே வேண்டாம்.” என்று நெத்தியடியாக கூறி முடித்திருக்கிறார் சசி.” என்கிறார்கள். 

ஜெயலலிதாவின் இறப்பின் பின்னணி பெரும் மர்மமாக இருக்கும் நிலையில், அதற்கு பி.ஜே.பி.யும் மிக முக்கிய காரணம்! எனும் ஆங்கிளில் சசி கொளுத்திப் போட்டிருக்கும் இந்த பட்டாசு, டெல்லி வரை வெடித்திருக்கிறது ஏக சவுண்டாக. 
சத்தம் கேட்குதா?