ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை அதிமுக அரசு ஏமாற்றி வருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 2-வது நாளாக மக்கள் சந்திப்பு பயணத்தை அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மேற்கொண்டார். பார்த்திபனுாரில் அனைத்து சமுதாயத்தினர், பல்வேறு அமைப்பினரை சந்தித்தார். பின்னர் புறநகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பேசினார். 

சுற்று பயணத்தின்போது டி.டி.வி.தினகரன் பேசியதாவது:- ஒற்றுமையாக இருக்கும் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்ற எண்ணம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஏழைகள், விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்களின் நலன் பாக்காமல் 33 அமைச்சர்கள் தான் நன்றாக வாழ்கின்றனர். அ.ம.மு.க., ஆட்சிக்கு வந்தால் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்போம்.

பழனிசாமி அரசு வரும் இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தக்க வைக்க முடியும். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் ஜானகியால் கூட ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. ஜெயலலிதாவுக்கு தாயாக, சகோதரியாக, தோழியாக இருந்த சசிகலா, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். 

அவர் வடக்கே உள்ளவர்களுக்கு ஏஜென்டாக செயல்பட்டதுடன், பா.ஜ.க.வை தமிழகத்தில் காலுான்ற வழிவகுத்ததால் நீக்கப்பட்டார். தொடர்ந்து பழனிசாமியை முதல்வர் ஆக்கினாலும் அவரும் துரோகம் செய்து விட்டார். எங்களுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் என்ன தவறு செய்தார்கள்? தமிழகத்தின் இன்றைய நிலையை மாற்றி அமைக்க மக்களவை, சட்டபேரவை தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.