மோடி தலைமையிலான ஆட்சி, மத்தியில் அமைந்ததை அடுத்து, பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தையும் நிர்மூலமாக்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன.

ஊழல் மற்றும் லஞ்ச வழக்குகளில் சிக்கிய, முக்கிய தலைவர்கள் அனைவரும், சிறையில் இருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு, அனைத்து வேலைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஊழல் மற்றும் மோசடி வழக்கில் சிக்கியவர்கள் தண்டனை அனுபவிப்பதற்கான தீர்ப்புகளும் விரைவு படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஹரியானா முன்னால் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, சிறையில் இருந்து வெளியில் வர முடியாத அளவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.

பீகாரில், செல்வாக்கு பெற்ற தலைவரான லாலு பிரசாத் மீதான, கால்நடை தீவன ஊழல் வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, ஆ.ராசா மீதான 2 ஜி வழக்கு விசாரணையும், விரைவாக முடிக்கப்பட்டு, தீர்ப்பு விரைவில் வர உள்ளது.

அந்த வரிசையில், சசிகலா குடும்பம், நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிமுகவை இயக்க கூடாது, என்பதற்காக, 20 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்திலும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகி, சசிகலா, இளவரசி, தினகரனின் சகோதரர் சுதாகரன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதும் அந்த வகையில்தான்.

அதேபோல், அந்நிய செலாவணி வழக்கில், தினகரனுக்கு 28 கோடி ரூபாய், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன், இன்னும் சில வழக்குகளும் தூசு தட்டப்பட்டு வருகின்றன.

தினகரனின் மற்றொரு சகோதரரான பாஸ்கரன், ஜெயா டி.வி க்கு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியதில், அந்நிய செலாவணி விதிமுறைகள் மீறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

இது தவிர, இவ்வளவுக்கு பின்னரும், சசிகலா குடும்பத்தை சேர்ந்த இருவர் இன்னும், கட்சி மற்றும் ஆட்சியில் மறைமுகமாக தலையிடுவதை அறிந்த டெல்லி, அவர்கள் மீதும் சில வழக்குகளை தொடுக்க திட்டமிட்டு வருகிறது.

பாஜக வின் இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கு, அதிமுகவும், திமுகவும் தயார் நிலையில் இல்லை. அதேபோல், அடுத்த நிலையில் இருக்கும் சில கட்சிகளும், சில பலவீனங்களால் பாஜகவுடன் மோதும் நிலையில் இல்லை.

ஆனால், பாஜகவை துணிவாக எதிர்க்கும் அளவுக்கு, ஊழல், மோசடி மற்றும் லஞ்ச வழக்குகளுக்கு ஆளாகாத சில கட்சிகள் தமிழகத்தில் இருந்தாலும், அவற்றுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாமல் இருப்பது சாபக்கேடு.