பறவை காய்ச்சல் நோய் தொற்று பீதி எதிரொலியாக கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்து, விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் 
நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. ராஜஸ்தான்,  இமாசல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைத் தொடர்ந்து அண்டை மாநிலமான கேரளத்திலும் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக கோழிப் பண்ணைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. எனினும் பறவை காய்ச்சல் நோய் தொற்று பீதி காரணமாக முட்டை யின் நுகர்வும், விற்பனையும் குறைய தொடங்கி உள்ளது. 

கடந்த  5- நாட்களாக முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.10 காசுகளாக நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று ( 8-1-2021) ஒரே நாளில் 25 காசுகள் அதிரடியாக விலை குறைந்துள்ளது. நாமக்கல் பகுதியில் இருந்து நாள்தோறும்  சுமார் 1 கோடி முட்டைகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பபடுவது வழக்கம். தற்போது தமிழக- கேரள எல்லை பகுதிகளில் 26 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை கள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

நோய் தொற்று பீதி காரணமாக அங்கு முட்டையின் நுகர்வும், விற்பனையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு செல்ல கூடிய முட்டைகள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் பகுதிகளில் உள்ளக் கோழிப்பண்ணைகளில் சுமார் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. முட்டைகள் தேக்கத்தால் பண்ணையாளர்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.