binarayee vijayan allot 10 percentgage for oc

கேரளாவில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இந்து உயர் சாதியினருக்கு தேவஸ்தான நிர்வாகக் குழுக்களில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். சமீப காலங்களாக கேரள அரசு பல முற்போக்கான திட்டங்களையும் அறிவித்தும், முடிவுகளையும் எடுத்து வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பிராமண சமூகத்தை சேராத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்தது. அதில் 6 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், அடுத்த கட்டமாக இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.

டுவிட்டரில் முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

கேரளாவில் உள்ள 5 தேவஸ்தான வாரியத்தின் நிர்வாகத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்து உயர் சாதி பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். நாட்டிலேயே முதல்முறையாக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது.

அதேசமயம், இதர பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈழவா சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு இருந்த 14 சதவீத இட ஒதுக்கீடு 17 சதவீதமாகவும், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினரின் இட ஒதுக்கீடு 10 முதல் 12சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் ஈழவா தவிர்த்து, பிற ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களை தேவஸ்தான நிர்வாகம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வக்பு வாரியத்தின் பணியிடங்களுக்கான தேர்வுகள் கேரள அரசு தேர்வானையத்தில் இருந்து நீக்கப்படும் எனவும் மாநில அமைச்சரவை அறிவித்துள்ளது.

மேலும், சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 56லிருந்து 60 ஆகவும், மருத்துவக்கல்வியில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு வயது 60 முதல் 62 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்ரீநாராயண குருவின் 125 ஆண்டு விழாவையொட்டி, திருவனந்தபுரத்தில் அவருக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.