சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் பெரிய மாற்றம் ஏற்படும் என காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. தனியரசு கூறியுள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ தனியரசு;- உலகப் புகழ்பெற்ற காளை இனங்களின் ஒன்றான காங்கேயம் காளையின் உருவச்சிலையை காங்கேயத்தின் நகரின் மையப் பகுதியில் போர்க்கால அடிப்படையில் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் ராதாகிருஷ்ணனும் உறுதியளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் கைது நடவடிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. அதிமுகவுக்காக நீண்டகாலம் பணியாற்றிய அவரின் கைது நடவடிக்கை தேவையற்றது. கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றிவர் என்ற அடிப்படையிலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் கூட கைது நடவடிக்கை அவசியமில்லை, உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 32 ஆண்டுகள் அவரது நிழலாக இருந்து வந்த சசிகலா சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்பது அக்கட்சியின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களின் விருப்பம் என்ற அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விருப்பத்தை நான் வரவேற்கிறேன். இதற்கு அரசு, நீதிமன்றம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அரசியலில் எடுக்கும் முடிவால் அதிமுகவில் பெரிய தாக்கமும், மாற்றமும் நிகழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.