மத்தியஅரசின் திருத்தப்பட்ட சுற்று சூழல் தாக்க வரைவு அறிக்கை மக்கள் விரோதமானது எனவும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- 50 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்யும் பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம் - 2006  ன் விதிகள் அவசியமாகும். இப்போது அதற்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. மத்திய பாஜக அரசு கொரோனா நெருக்கடி கால பலஹீனங்களை, தங்கள் ரகசிய திட்டங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்தும் விதத்தில் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை  நிறைவேற்ற துடிக்கிறது. அதன்படி நடைமுறையில் உள்ள சுற்றுச் சூழல் சட்ட விதிமுறைகள் - 2006-ல் சில திருத்தங்களை செய்து ஏப்ரல் 11, 2020 மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. 

 இதை 22 மொழிகளில் வெளியிட்டு, ஆகஸ்ட் 11, 2020 வரை பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என இது தொடர்பான ஒரு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையும், கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.சந்திரசூட் அவர்கள் இது தொடர்பாக அளித்த தீர்ப்பையும் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை  - 2020 என்பது 
சூழலியல் நலன் சார்ந்த கட்டுப்பாடுகளை  தளர்த்த வழி வகுக்குகிறது. இதனால் நீர் வளங்களும், விவசாய நிலங்களும், மணல் திட்டுகளும், வனங்களும் பெரு நிறுவனங்களால்  எளிதில் சூரையாடப்படும் அபாயங்கள் ஏற்பட்டுள்ளது. சில திட்டங்களுக்கு அப்பகுதிகளில் வாழும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை என்பதில் தான் பேராபத்து புதைந்துக் கிடக்கிறது. சுரங்கம், கனிம வளத் திட்டங்கள், எரிவாயு எடுப்பு  போன்றவற்றுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது. 

இவை கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விரிக்கப்படும் சிவப்பு கம்பளமாகும். மேலும் , மத்திய அரசு விரும்புகிற எந்த திட்டத்தையும், எந்த மாநிலங்களிலும் அவர்கள் அனுமதியின்றி செயல்படுத்தலாம் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான போக்காகும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற சூழலியல் சார்ந்த அமைப்புகள் இனி அர்த்தமற்று போகும். இதனால் தமிழக நலன்கள் மட்டுமல்ல, முழு இந்தியாவின் இயற்கை வளங்களும்  ஆபத்தை  எதிர்கொண்டுள்ளது என்பதே உண்மையாகும். வளர்ச்சி என்பது இயற்கையையும், மக்கள் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது நாட்டின் நலனுக்கு  பக்க வாதத்தை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது.' சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை - 2020 ' நாட்டு நலனுக்கு எதிரான மக்கள் விரோதமான ஒன்று என்பதால், இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
என அதில கூறப்பட்டுள்ளது.