உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் மூக்கறுந்த சூர்ப்பனகை போல் திமுக மாறியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார். 

பாரதியாரின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, காமராஜர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் "உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஆரம்பம் முதலே அதிமுகவுக்கு இருந்ததாக குறிப்பிட்டார். உள்ளாட்சிப் பதவிகளுக்கு கொல்லைப்புறம் வழியாக வருவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகளை, கொல்லைப்புறம் வழியாக தேர்ந்தெடுப்பது சட்ட விரோதம். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து மீறல்கள் நடந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.

நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என பாரதி ஒரு பாடலில் குறிப்பிடுவார். இது யாருக்குப் பொருந்துதோ, இல்லையோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிச்சயம் பொருந்தும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.