மத்திய பாஜக அரசை கண்டித்து இன்றும் நாளையும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இன்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் நாளை மாலை வரை நடக்க உள்ளது. பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மிக மோசமான திட்டங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடக்கிறது

போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. 


ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. உள்பட மொத்தம் 10 அமைப்புகளில் உள்ள மொத்தம் 20 கோடி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ. 18 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் உள்ளிட்டவை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். 

இந்த 2 நாட்கள் போராட்டத்தால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. அவர்களுக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த அமைப்புகள் சில ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்திலும் போக்குவரத்து மற்றும் மின் வாரிய ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்ளில் பஸ் போக்குவரத்தும் முடங்கியது. வடமாநிலங்களில் ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும். தமிழ்நாட்டில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.  பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்தும் இயல்பாக இயங்கி வருகிறது. 

முன்னதாக போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், ’’வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது’’ என உத்தரவிட்டு இருந்தார். அதேநேரத்தில் வணிகர் சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதனால் மற்ற மாநிலங்களைப்போல இந்தப்போராட்டம் வலுவாக இல்லை. இயல்பு நிலையே தொடர்வதால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை.