அன்றைக்கு  கட்சிக்குள் தமிழிசைக்கு எதிராக அரசியல் நடந்தது, அதே அரசியல் இன்று அண்ணாமலைக்கு எதிராக நடக்கிறது.  ஆனால் அண்ணாமலை ஒரு கருத்தில் உறுதியாக இருக்கிறார்.  அதாவது உள்ளாட்சி போன்ற தேர்தல்களில் அதிக இடங்களில் நின்றால் தான் ஒரு கட்சி தனது வேர்களை ஆழமாக ஊன்ற முடியும் என்பதில் உறுதியாக உள்ளார். இதைதான் அமித்ஷா செய்து காட்டினார். 

அண்ணாமலை வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக கட்சியில் அவருக்கு எதிராக உள்குத்து அரசியல் நடக்கிறது, அதன் வெளிப்பாடுதான் அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிவுக்கு காரணம் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். சவாலான இந்த தருணத்தில் அண்ணாமலை வெற்றி பெற்று தலைமைப்பண்மை தக்கவைத்துக் கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே தமிழகத்தில் பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிறைந்த பதவியாக இருந்து வருகிறது. பாஜக தலைவராக பதவி வகித்த ஒவ்வொருவரும் மத்திய அமைச்சர் பதிவு பெற்றதே அதற்கு காரணம். ஒரு காலத்தில் தலைவராக யாரை தேர்வு செய்வது என்று ஒரு சிலருக்குள் பேசி முடிவெடுத்துக் கொள்ளும் நிலை மாறி பாஜக தலைவரை நியமிக்கும் பொறுப்பு டெல்லி வரை சென்று பவர் பாலிடிக்ஸ் செய்யும் அளவிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அது மாறியது. பொன் ராதாகிருஷ்ணன் தலைவராக இருந்து மத்திய அமைச்சரானார். அதன்பிறகு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநரானார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 எம்எல்ஏக்களை பாஜக பெற்ற நிலையில் மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்தான் தமிழக பாஜகவுக்கு தலைவராகிவிட்டால் போதும் மத்திய அமைச்சர் பதவி வீடு தேடி வரும் என்ற மனநிலை பாஜக தலைவர்களிடம் உருவாகியுள்ளது. அதுவே இந்த பதவியை அடைய போட்டி போடுவதற்காக காரணமாகவும் உள்ளது. எல். முருகன் அமைச்சரான கையோடு கட்சிக்குள் பல சீனியர்கள் தலைவர் பதிவையே கைப்பற்ற டெல்லியில் முகாமிட்டு காய்நகர்த்தினர். ஆனால் கட்சியில் சேர்ந்து ஓராண்டு கூட நிறைவடையாத அண்ணாமலைக்கு அத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அந்த தகவல் வெளியானவுடன் பல சீனியர்கள் ஆப்செட் ஆகிப்போயினர். கட்சிக்கு பல ஆண்டுகளாக உழைத்த தங்களை விடுத்து புதியவர்களுக்கு பதவியா என்று கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் க. டி ராகவன் விவகாரம் அண்ணாமலையின் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை முறையாக பேசி முடிக்காமல் அது வெளியில் தெரிவதற்கு அண்ணாமலை தான் காரணம் என சீனியர் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் டெல்லிக்கு அண்ணாமலை மீது ரிப்போர்ட் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதில் எப்படியோ பேசி வெளியில் வந்த அண்ணாமலைக்கு நயினார் நாகேந்திரன் விவகாரம் இடியாக இறங்கியுள்ளது. அதாவது நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து பேசிய பேச்சு அதிமுகவினரை கொதிப்படைய செய்ததன் எதிரொலியாக 10 ஆண்டுகளாக நீடித்து வந்த கூட்டணியை இரு கட்சிகளும் முடித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. பாஜக கேட்ட இடங்களை அதிமுக கொடுக்க மறுத்ததுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக முதல் பட்டியல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் கொடுக்கும் இடங்களை ஏற்றுக்கொண்டால் இணைந்து போட்டியிடலாம், இல்லை என்றால் தனித்து போட்டியிட அதிமுக தயாராக இருக்கிறது என வெளிப்படையாகவே ஓபிஎஸ் இபிஎஸ் அண்ணாமலையிடம் கூற, செய்வதறியாது திகைத்த அண்ணாமலை பாஜகவும் தனித்துப்போட்டியிடும் என துணிந்து அறிவித்துள்ளார்.

ஆனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளார். அண்ணாமலையை பொறுத்த வரையில் அதிமுகவை எப்படியேனும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது. அதிமுக பாஜக கூட்டணிக்குள் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதில் அண்ணாமலை கவனமாக இருந்தாலும், பாஜக தலைவர்கள் சிலரது பேச்சு அடிக்கடி அதிமுகவினரை வம்பு இழுக்கும் வகையிலேயே இருந்துவந்தது. அந்த வகையிலான ஒன்றுதான் நயினாரின் பேச்சு என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலை வளர்ந்து பெரிய ஆள் ஆகி விடக்கூடாது, டெல்லியில் தலைமையிடம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே கட்சிக்குள் அவருக்கு எதிராக நடக்கும் உள்ளடி வேலைகள் ஒன்று தான் இது என்று விவரம் தெரிந்த பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, அதிமுக பாஜக கூட்டணிக்கு முறிவுக்கு காரணம் அண்ணாமலைக்கு எதிரான துரோக அரசியல்தான் என அடித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-நிச்சயம் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கு நயினார் நாகேந்திரன் பேச்சு முக்கிய காரணம், கூட்டணி உடைய வேண்டும் என்ற நோக்கம் கூட அவரது பேச்சிலிருந்திருக்கலாம். அதேபோல் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு பெரிய அளவில் விருப்பமில்லை, நான்கு முறை அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து இருக்கிறது. அந்த நான்கு முறையும் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் தோல்வியை தழுவியிருக்கிறார். 98ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சி பலமாக இருந்தபோதுகூட தோல்வியை தழுவினார். 1999 இல் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றார். 2014ஆம் ஆண்டில் மும்முனைப் போட்டியில் வெற்றி பெற்றார். இதனால் அவரின் நடவடிக்கைகள் பேச்சுக்கள் இந்த அணி உடைய வேண்டும் என எதிர்பார்த்திருந்தார் என்பதுபோல அவரின் முக பாவனை, நடவடிக்கைகள் மற்றும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், துள்ளியமாக அவர் பேசிய வார்த்தைகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. 

இதே போல தான் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்கே நகர் தேர்தலில் வேட்பாளர் என்பதை பாஜகவின் முக்கிய தலைவர்கள் விளம்பரப் படுத்தினார்கள். ஆனால் கடைசியில் அந்த தலைவர்கள் அந்தப் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அந்த தேர்தலை நிறுத்த வேண்டும், டிடிவி தினகரன் அதிக சதவீத வாக்குகளை எடுப்பார் என தமிழிசை சவுந்தரராஜன் கட்சிக்கு அறிக்கை வழங்கிய போதும், தேர்தலை நிறுத்தினால் ஜனநாயக படுகொலை ஆக்கிவிடும், தேர்தலை நிறுத்த கூடாது என இல.கணேசன் போன்றவர்கள் அரசியல் செய்தனர். அன்றைக்கு கட்சிக்குள் தமிழிசைக்கு எதிராக அரசியல் நடந்தது, அதே அரசியல் இன்று அண்ணாமலைக்கு எதிராக நடக்கிறது. ஆனால் அண்ணாமலை ஒரு கருத்தில் உறுதியாக இருக்கிறார். அதாவது உள்ளாட்சி போன்ற தேர்தல்களில் அதிக இடங்களில் நின்றால் தான் ஒரு கட்சி தனது வேர்களை ஆழமாக ஊன்ற முடியும் என்பதில் உறுதியாக உள்ளார். இதைதான் அமித்ஷா செய்து காட்டினார். அந்தவகையில் தாமும் இருக்க வேண்டும் என அண்ணாமலை முயற்சிக்கிறார்.

2024 40% கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆன இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பதால் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக வார்த்தைகளை சரியாகவே பயன்படுத்தி வந்தார். ஆனால் பாஜக தலைவர்களுக்குள்ளாகவே தமிழிசை தலைவராகி விட்டார், அண்ணாமலை தலைவராகி விட்டார் என்ற தங்களுக்குள் உள்ள அடிப்படை எண்ணத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். அதற்கான வேலையை காட்டுகிறார்கள் என்பதையே இப்போது உணர முடிகிறது. கட்சிக்குள்ளாகவே தலைமைக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடக்கிறது. ஆனால் அது தெரிந்தோம் அண்ணாமலை இதில் ரிஸ்க் எடுத்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதாவது இரட்டை இலக்கத்தில் இடம் தர முடியாது என அதிமுக மறுத்து விட்டடாலும், அண்ணாமலை தனது பெர்ஃபார்மன்ஸ் மூலம் அதை வென்று காட்டிவிட்டால், அண்ணாமலைக்கு மிகப்பெரிய கிரெடிட் கிடைக்கும்.

ஆனால் இன்னும் கூட அவர் இபிஎஸ்- ஓபிஎஸ் க்கு உரிய மரியாதை வழங்குவதை காட்டுகிறார். அதனால்தான் 2024-ல் கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறுகிறார். அதேபோல 2011 இல் வெற்றி பெற்றது போல, மிகக் கணிசமான அளவிற்கு இடங்களில் பாஜக வெற்றி பெறுவதன் மூலம், அதிமுக பல இடங்களில் பலவீனம் அடைவதன் மூலம், அண்ணாமலைக்கு எதிர்காலத்தில் ஒரு லீடர்ஷிப் உருவாக வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.