திமுக தலைவரின் ‘புலி பதுங்குவதற்கு பாய்வதற்குத்தான்’ என்ற பேச்சே அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்களை மீண்டும் அதிமுகவில் அரவணைத்துக்கொண்டதற்குக் காரணம் என அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரலில் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்ய அதிமுக முயற்சி செய்தது. இடையில் புகுந்த திமுக, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் வழங்கியது. இதைக் காரணம் காட்டி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் எம்.எல்.ஏ. பதவி பறிப்பிலிருந்து தப்பினார்கள்.
இதற்கிடையே சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியதும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, திமுக அதிலிருந்து பின்வாங்கியது. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றது திமுக மீது விமர்சனங்களைக் கிளப்பியது. ஆனால், உண்மையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்குப் பதில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் யோசனை ஒன்றும் திமுகவில் இருந்த காரணத்தாலேயே சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாபஸ் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதையொட்டிதான் , “சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தைத் திரும்ப பெற்றதும் பயந்துவிட்டோம் என்று நம்மை விமர்சிக்கிறார்கள். புலி பதுங்குவது பாய்வதற்குதான். நாங்கள் ஒற்றர்களுக்குள் ஒற்றர்களை வைத்திருக்கிறோம்” என்று விழுப்புரம் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் திமுக பின்வாங்கவில்லை என்பதை அறிந்த பிறகு அதிமுகவும் ஆடிப்போனது.
இதன்பிறகே அதிமுகவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைச் சரிக்கட்டும் முயற்சிகளை அதிமுக தொடங்கியதாக அக்கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கடைசி நேரத்தில் திமுக தரப்புக்கு உதவி செய்துவிடக் கூடாது என்று அதிமுக மேல்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகே அவர்கள் மூவரையும் அதிமுகவில் இணைந்துக்கொள்ள முடிவாகியிருக்கிறது.
கடந்த மாதம் ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவில் பிரச்னை எழுந்தபோது எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. தங்களை ஏன் அழைக்கவில்லை என்று மூவருமே அதிருப்தி தெரிவித்தனர். ஆனால், தற்போது மூன்று பேரையும் அதிமுகவில் அரவணைத்துக்கொள்ள முடிவு எடுத்த பின்னணியிலும் அவர்கள் திமுகவுக்கு எந்த வகையிலும் உதவி செய்துவிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் என்கிறார்கள் அதிமுகவில்.


எதிர்க்கட்சிகளுக்கு துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்புக்கு  தடைபோட  சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அஸ்திரமாக திமுக வீசியது. ஆனால், தற்போது அவர்களைக் கட்சிக்குள் இணைத்து அந்த அஸ்திரத்தை மழுங்கடித்துவிட்டது அதிமுக என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள் ர.ர.க்கள். பதிலுக்கு திமுக என்ன செய்யப்போகிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.