பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள்... எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவின் 2வது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை நடத்தி வரும் பாலாஜி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யாவிட்டால், எங்கள் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என கூறியது. இந்த வழக்கு அவசர வழக்காக நேற்று விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா பல்லி மத்திய அரசை கடுமையாக சாடினர். 

நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் சாக வேண்டுமென விரும்புகிறீர்களா? துயரமான இந்த சமயத்தில் கூடவா அரசு விழித்துக் கொள்ளாது? மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் போது, ஸ்டீல் ஆலைகள் மட்டும் ஆக்சிஜன் கொண்டு இயங்குவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. மனிதாபிமானமே இல்லையா? டெல்லியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிலும் இதே நிலை நீடிக்கிறது. உண்மையிலேயே இது மோசமானது. தொழிற்சாலைகளை பற்றி கவலைப்படும் நீங்கள் மக்கள் சாவதைப் பற்றி கவலைப்பட மாட்டீர்களா? மனித உயிரைக் காட்டிலும் எதுவும் முக்கியமில்லை. 

எனவே நீங்கள் பிச்சை எடுப்பீர்களோ, கடன் வாங்குவீர்களோ, திருடுவீர்களோ தெரியாது, தேவையான ஆக்சிஜனை உடனே சப்ளை செய்ய வேண்டும்’’ என்றனர். இதையடுத்து, டெல்லிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.