மார்பக பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதில் ரகசியம் காக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நடிகை வரலட்சுமி பெண்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

ஆண்களுக்கு எப்படி உடலுறுப்புகள் இருக்கிறதோ அதேபோல்தான் பெண்களுக்கும்  மார்பகம் என்பது ஒரு உறுப்பு, அதைப் பற்றி வெளியில் பேச கூச்சப்படத்தைவையில்லை என நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். மார்பகங்களில்  ஏற்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து சென்னை விமான நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 
மார்பக  சிகிச்சை  நிபுணர்கள் மற்றும் பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகை வரலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  பெண்களின் ஆரோக்கியம் குறித்து பல்வேறு விஷயங்களை அப்போது அவர் பகிர்ந்து கொண்டார். பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும்  பிரச்சனைகளில்  மார்பக பிரச்சினை மிக முக்கியமானது என்றார்.

அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இப்பிரச்சனை குறித்து பெண்கள் வெளிப்படையாக பேச தயங்குகின்றனர். அதனால் நாளடைவில் பிரச்சனைகள் பெரிதாகி அதிக செலவு செய்து  சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளாகின்றனர். இன்னும் பலர் உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர் என்றார். மார்பகங்களில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தாயிடமோ அல்லது சகோதரிகளிடமோ வெளிப்படையாக சொல்லி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில்  பிரச்சனைகளில் இருந்து விடுபடமுடியும் என்றார். நாம் மார்பகம் என்றாலே அதைப் பற்றி பேசக் கூடாது என்ற மன நிலையுடன் இருந்து வருகிறோம் முதலில் அந்த மனநிலையில் இருந்து விடுபடவேண்டும். உடல் ஆரோக்கியமே முக்கியம் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் தோன்ற வேண்டும் என்றார்.