பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரனுக்கும்  சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் நாளை  திருமணம் நடக்க இருந்தது.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்  மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக  நடந்தது. உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காமல் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி அக்காள் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் மாயமாகி விட்டார். மணப்பெண் திடீரென மாயமானதால் இருவர் வீட்டிலும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்தது போலீசார் சந்தியாவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் சந்தியாவை மீட்டு விசாரணை நடத்தியதில், தனக்கும் எம்எல்ஏ மாப்பிள்ளை ஈஸ்வனுக்கு இடையே 20 வயது வித்தியாசம் இருப்பதால் இந்த திருமணத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

மேலும் தான் அங்கிருந்தால் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்பதால் அங்கிருந்த தப்பி தனது தோழி வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சந்தியா அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்டடார்.

இந்நிலையில் குறித்த முகூர்த்தத்தில் எம்எல்ஏவுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்கும் என  ஈஸ்வரன் தரப்பில் அறிவிக்கபபட்டு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது.

பன்னாரி அம்மன் கோவிலில் 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்டமான பந்தல் போடும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை வரவேற்க பிரமாண்ட பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் இன்று அதிகாலையிலேயே பந்தல் போடும் பணிகள் நிறுத்தப்பட்டன. பிளக்ஸ்களும் அடிக்க வேண்டாம் என எம்எல்ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேறு பெண் யாரும் கிடைக்காததால் நாளை நடைபெறுவதாக இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது