கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் இச்சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தச் சின்னத்தை ஏற்க அக்கட்சி மறுத்தது. இதனையடுத்து மீண்டும் பேட்டரி டார்ச் சின்னத்தைக் கேட்டு மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தை அணுகியது.


இந்நிலையில் பேட்டரி டார்ச் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்துக்கு தேர்தல் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவருடைய பதிவில், “மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.