தன் மகள் உயிரிழந்த தூக்கம்  மறைவதற்குள் பேனர் வைக்க அரசு முற்படுவதே நியாயம் தானா என பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் தாய் கீதா வேதனை தெரிவித்துள்ளார். பிரதமரை வரவேற்க வேறு வழியே இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  சட்டவிரோதமாக பேனர் வைத்த வழக்கில் அதிமுக  முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் முன்வந்து இனி பேனர் வைக்க மாட்டோம் என சூளுரைத்தன.  இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழந்த நாள் முதல்  தற்போது வரை பேனர் விவகாரத்தில் மௌனமாக இருந்துவரும் அதிமுக, தற்போது மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க, பேனர் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதி மன்றத்தை நாடியது.  முதலில் அதை கண்டித்த உயர்நீதிமன்றம், பிரதமர் நிகழ்ச்சிக்கு மட்டும் பாதுகாப்பான முறையில் பேனர் வைத்துக்கொள்ளலாம் என பிறகு அனுமதிவழங்கியுள்ளது.

அரசின் இந்த முடிவு குறித்து வேதனையை வெளிப்படுத்தியுள்ள சுபஸ்ரீயின் தாய் கீதா, தன் மகள் உயிரிழந்த  துக்கம் மறைவதற்குள், மீண்டும் பேனர் வைக்க வேண்டுமென தமிழக அரசே நீதிமன்றத்தை நாடி அனுமதிபெற்றிருப்பது, கொடுமையிலும் கொடுமை என்றார்.  பிரதமர் மோடியை பேனர் வைத்துத்தான் வரவேற்க வேண்டுமா.? வேறு வகையில் வரவேற்க முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பேனர் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தும் போது, மீண்டும் பேனர் வைக்கிறோம் என அரசு முடிவெடுப்பது வேதனையளிக்கிறது என கீதா அரசை சாடியுள்ளார்