அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,  உமாபாரதி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆர்) இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இறுதியாக, அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலானோர் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராயினர். இம்மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை நீதிபதி எஸ்.கே.யாதவ்  ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.