அவரது திறமை, ஆற்றல், தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு ஆகியவை எனக்குத் தெரியும்  என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “திமுகவில் நிச்சயம் பிளவு ஏற்படும். அழகிரியின் 40 ஆண்டுகள் அரசியல் பணியைப் பற்றி மதுரையில் உள்ள எனக்கு தெரியும். அவரது திறமை, ஆற்றல், தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு ஆகியவை எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

தேசியக் கட்சியின் தயவு இல்லாமல் திராவிட கட்சிகள் இயங்காது என்பது தமிழிசையின் சொந்த கருத்து. தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால் அப்படி கூறியிருக்கலாம் என்று குறிப்பிட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, “எப்போது நிதானமாகப் பேசக்கூடிய, ஆழமாகச் சிந்திக்கக்கூடிய ரஜினி தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார். அதிமுக அரசை விமர்சிக்கிறார். விமர்சனம் செய்யும் அளவுக்கு ரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை. ஆர்.எம்.வீரப்பனிடம் ரஜினி பாடம் கற்க வேண்டும்.

 மேலும் பேசிய அவர்,  எம்ஜிஆரும், கருணாநிதியும் சூரியனும் சந்திரனையும் போன்றவர்கள், மாறுபட்ட கருத்துகளை உடையவர்கள். அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதைத்தான் அவரது பேச்சு பிரதிபலிக்கிறது. இரண்டு கட்சி தொண்டர்களையும் இழுக்க ரஜினி முயற்சி செய்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.