தி.மு.க தொண்டர்கள் என் பக்கம், தி.மு.க அறக்கட்டளை நிதியில் முறைகேடு, ஸ்டாலின் திறமையற்றவர் என்று அதிரடியாக கலகத்தை ஆரம்பித்த மு.க.அழகிரி தற்போது தி.மு.கவில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு இறங்கி வந்ததன் பின்னணியில் ஸ்டாலினுக்கு எதிராக மாஸ்டர் பிளான் இருப்பதாக முனுமுனுக்கிறார்கள்.

   கலைஞர் மறைவை தொடர்ந்து ஸ்டாலினை குடும்பத்தினர் மூலம் மிரட்டி தி.மு.கவில் சேர முயற்சி செய்தார் அழகிரி. ஆனால் கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசுடன் போராடி வென்றதன் மூலம் கிடைத்த மன உறுதி அழகிரியையும் எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு உதவியது. கலைஞரால் நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது வேட்டிக்குள் ஓணானை பிடித்து விட்டுக் கொள்வதற்கு சமம் என்று ஸ்டாலின் கருதினார்.

   மேலும் அழகிரியை கட்சிக்குள் மீண்டும் சேர்ப்பது கோஷ்டி அரசியலுக்கு வழிவகுக்கும் என்றும் ஸ்டாலின் நம்பினார். இதனை தி.மு.க மூத்த  நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் அழகிரியை கட்சிக்குள் விட்டால் எதிர்காலத்தில் தனது வாரிசை தி.மு.கவில் முன்னிலைப்படுத்துவதற்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதும் ஸ்டாலினுக்கு தெரியும்.

   எனவே தான் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கவே முடியாது என்று உறுதியான முடிவை எடுத்தார் ஸ்டாலின். குடும்ப உறுப்பினர்கள் மூலமான பஞ்சாயத்தில் சாதகமான முடிவு கிடைக்காத காரணத்தினால் தி.மு.கவினரை அழைத்து கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்போவதாக அழகிரி அறிவித்தார். இதற்கு தி.மு.க தொண்டர்கள் மத்தியில் துளியளவு கூட ஆதரவு இல்லை.

   இதனால் ஸ்டாலின் அழகிரியை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எவ்வளவோ முயன்றும் பேரணிக்கும் ஆதரவை கூட்ட முடியவில்லை, ஸ்டாலினும் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனவே வேறு வழியில் சென்றால் தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்கிற முடிவுக்கு அழகிரி வந்துள்ளார். இதுநாள் வரை அதிரடி அரசியல் செய்த அழகிரி, அரவணைப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார்.

   அதாவது சென்டிமென்ட்டாக இந்த விவகாரத்தை அணுக அழகிரி முடிவு செய்துள்ளார். கலைஞரின் மூத்த மகன் தி.மு.கவில் சேர ஏங்குகிறார், ஆனால் இளைய மகன் ஸ்டாலின் கட்சியில் சேர்க்க மறுக்கிறார் என்கிற ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியில் அழகிரி இறங்கியுள்ளார். இதன் மூலம் ஸ்டாலினை எமோசனல் பிளாக் மெயில் செய்யும் வேலை தொடங்கியுள்ளது.

   முதலில் தி.மு.கவில் சேர்ந்தால் போதும், அதன் பிறகு தனக்கு என்று ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று அழகிரி நம்புகிறார். தற்போது தி.மு.கவில் தான் இல்லாத காரணத்தினால் தான் தன்னுடன் வர தி.மு.கவினர் தயங்குவதாகவும் அழகிரிகருதுகிறார். எனவே கட்சியில் முதலில் சேர வேண்டும். அதற்கு சென்டிமென்ட் தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து ஸ்டாலினிடம் கெஞ்சுவது போன்ற ஒரு பேட்டியை அழகிரி கொடுத்துள்ளார்.

   தொடர்ந்து இதே பாணியில் சென்டிமென்டாக பேசி ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து தி.மு.கவில் சேர்ந்தால் போதும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அழகிரி முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாகவே தனது பேஸ்புக் பக்கத்தில் கூட கலைஞருடன் தானும் ஸ்டாலினும் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அழகிரி பதிவை வெளியிட்டுள்ளார்.

   ஆனால் இது எல்லாம் எமோசனல் பிளாக் மெயில் என்று தெரிந்துள்ள ஸ்டாலின் இதனை எதிர்கொள்ள எந்த மாதிரியான பிளானை கையில் எடுக்கப்போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்.