திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு  எந்தக்காலத்திலும் இடமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார். 

முன்னாள் திமுக மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி அக்கட்சியில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். 
அதன் பிறகு பல முறை திமுகவில் இணைய முயற்சி செய்தார். ஆனால் மறைந்த கருணாநிதியோ அல்லது தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ அவருக்கு இடம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகராட்சி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ராஜ் மகள் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் மு.க.அழகிரி தலைமை தாங்கி பேசினார் அப்போது தி.மு.க.வில் எம்.எல்.ராஜ் போன்றவர்கள் கட்சி வளர்ச்சிக்காக உழைத்தவர்கள். அவர்களை மறந்துவிட முடியாது. ஆனால் இப்போது அப்படி இல்லை, சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள் பினாமி போல செயல்படுகிறார்கள். அந்தந்த மாவட்ட செயலாளர்களை வேறு எங்கோ இருப்பவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். தி.மு.க.வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு இடமில்லை என விரக்தியாக தெரிவித்தார்..