அழகிரியை விமர்சித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு அழகிரியின் மகன் துரை தயாநிதி பதிலடி கொடுத்துள்ளார். 

கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அழகிரி அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுகவில் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. 2014ல் அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவிற்கு பிறகு மீண்டும் திமுகவில் இணைந்து கட்சியில் உயர் பதவியை பெறுவதோடு தனது மகனுக்கும் முக்கிய பொறுப்பை பெற்றுத்தர தீவிரம் காட்டி வருகிறார்.

இதுதொடர்பாக கட்சிக்குள்ளும் அவர்களது குடும்பத்துக்குள்ளும் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அழகிரி, அதிரடியாக பேட்டியும் கொடுத்தார். கட்சி ரீதியான தனது ஆதங்கத்தை தந்தையிடம் தெரிவித்ததாகவும், கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கமே உள்ளதாகவும் பேட்டி கொடுத்தார். தனது ஆதங்கத்திற்கு காலம் பதில் சொல்லும் என மிரட்டும் தொனியிலும் பேசினார். 

இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அழகிரி போர்க்கொடி தூக்கியதை அடுத்து பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் துரைமுருகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் ஸ்டாலின் விரைவில் திமுகவின் தலைவர் ஆவார் எனவும் கருணாநிதியின் வடிவமாக ஸ்டாலினை பார்ப்பதாகவும் பேசினர். இது ஏற்கனவே ஆதங்கத்தில் இருக்கும் அழகிரிக்கு அதை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

இப்படியாக கட்சிக்குள் பரபரப்பு நீடித்துவரும் நிலையில், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் அழகிரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வீரமணி, வீட்டில் இருப்பவர்கள் குறித்து கேளுங்கள். விருந்து சாப்பிட வந்தவர்கள் குறித்து கேட்காதீர்கள் என பதிலளித்தார். 

கி.வீரமணியின் கருத்துக்கு அழகிரியின் மகன் துரை தயாநிதி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அந்த டுவீட்டில், காலம் காலமாக திமுகவிலும் அதிமுகவிலும் ஓசி சோறு உண்ணும் ஐயா வீரமணி அவர்கள் இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார். 

அழகிரி மட்டுமே அதிரடியாக பேசிவந்த நிலையில், தற்போது அவரது மகன் துரை தயாநிதியும் களத்தில் இறங்கி அதிரடி காட்ட தொடங்கியுள்ளார். தந்தை குறித்த கி.வீரமணியின் கருத்துக்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் துரை தயாநிதி. அழகிரியின் மகன் துரை தயாநிதியும் களத்தில் குதித்துள்ளதால் அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.