மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. தமாகா வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால் குறைந்தது இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது.

இதை எதிர்த்து, ஜி.கே.வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைப்படி குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தமாகா சைக்கிள் சின்னத்தைப் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், 1 தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால், சைக்கிள் சின்னம் மறுக்கப்பட்டது.

இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு வாபஸ் நேரம் முடிந்ததையடுத்து, சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், “ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி, இது வெற்றிச் சின்னம். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தக் கூடியது, எந்நேரமும் அவசர தேவைக்கு இருப்பது ஆட்டோ. கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டான ஆட்டோ சின்னம் போல, கடின உழைப்பால் தஞ்சை மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிபெறுவோம்” என்று தெரிவித்தார்.