தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் 3.1 முதல் 4.5 கிலோ மீட்டர் இடைப்பட்ட உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

(30-12-2020) (31-12-2020) தேதிகளில் கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1-1-2021, மற்றும்  2-1-2021 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். 

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.