நடிகர் ரஜினி கட்சி துவங்கியதும் முதல் ஆளாய் சென்று அவருடன் கூட்டணி உடன்பாடு செய்து கொள்ள ஜி.கே.வாசன் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசனுக்கான முக்கியத்துவத்தை ராகுல் காந்தி குறைக்க ஆரம்பித்தார். இதனை முன்கூட்டியே உணர்ந்து காங்கிரசில் இருந்து விலகி தமிழ்மாநில காங்கிரஸ் என்று புதிய கட்சியை ஆரம்பித்தார் வாசன். அதன் பிறகு 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்ற வாசன் அந்த தேர்தலில் படு தோல்வியை எதிர்கொண்டார். இதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் 2019 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் வாசன்.

நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு சீட் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு நின்ற அக்கட்சி வேட்பாளர் தோல்வியை தழுவினார். அந்த வகையில் கட்சி ஆரம்பித்து இரண்டு தேர்தல்களை எதிர்கொண்டு இரண்டிலுமே வாசன் தோல்வியை தான் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் கூட நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஜி.கே.வாசனுக்கு அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது. இதற்கு காரணம் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது வாசன் இணக்கமாக நடந்து கொண்டது மற்றும் பாஜக அறிவுறுத்தலின் பேரில் வாசனை ராஜ்யசபாவிற்கு அனுப்ப அதிமுக ஒப்புக் கொண்டது.

ராஜ்யசபா எம்பி ஆன பிறகு வாசனின் அரசியல் வாழ்வில் சற்று ஏறுமுகம் ஏற்பட்டது. அதோடு மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தின் சார்பாக வாசனை சேர்த்துக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வாசன் விரைவில் மத்திய அமைச்சராகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் வாசன் நீடித்து வந்தாலும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் அணியில் இடம் பெற வேண்டும் என்று வாசன் வியூகம் வகுத்து வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி அதிமுக கூட்டணிக்கு சட்டப்பேரவை தேர்தலிலும் ஏற்படலாம் என்று பரவலாக பேச்சு உள்ளது. அதே சமயம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதால் அங்கு வாசன் செல்வதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் ரஜினி கட்சி ஆரம்பித்து புதிய அணி உருவாக்கினால் அது மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாசன் நம்புகிறார். மேலும் ரஜினி வாசனின் தந்தை மூப்பனாருக்கு மிக நெருங்கிய நண்பர். 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசை மூப்பனார் உருவாக்கிய போது சைக்கிள் சின்னத்தில் ரஜினி ஓட்டு கேட்டார்.

அண்ணாமலை சைக்கிள் என்று அப்போது தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அந்த வகையில் ரஜினியுடன் மூப்பானாரை தொடர்ந்து அவரது மகன் ஜி.கே.வாசனும் இணக்கமான உறவை பேணி வருகிறார். மேலும் ரஜினி சொல்வது போல் வாசனுக்கு தமிழகத்தில் மிஸ்டர் கிளீன் என்கிற இமேஜ் உள்ளது. பத்து வருடங்கள் மத்திய அமைச்சராக இருந்த போதும் ஊழல் குற்றச்சாட்டில் வாசன் சிக்கியது இல்லை. இதனை மனதில் கொண்டே வாசனை மத்திய அமைச்சராக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மேலும் ரஜினி அமைக்கும் கூட்டணிக்கும் வாசனை அனுப்பி வைக்க கூட பாஜக தயங்காது என்கிறார்கள். அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாசன் வாழ்த்து கூட தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக சார்பில் தற்போதே கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் வாசன் தற்போது வரை அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். இதற்கு காரணம் ரஜினி கட்சி துவங்கும் வரை காத்திருப்பது என்று வாசன் முடிவெடுத்துள்ளது தான் என்று சொல்கிறார்கள்.

ரஜினி ஜனவரி இறுதியில் கட்சி துவங்கினால் அடுத்த பத்து நாட்களில் அவரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்துவது என்கிற முடிவில் வாசன் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே அதிமுக கூட்டணிக்கு அல்வா கொடுத்துவிட்டு ரஜினி தலைமையிலான அணியில் முதல் ஆளாய் இணைந்தால் நல்ல மரியாதையுடன் அதிக தொகுதிகளும் கிடைக்கும் என்று வாசன் கணக்கு போட்டுள்ளார். இது குறித்து வாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.