மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை மசோதாவால் அசாம் மாநில சகோதர சகோதரிகள் கவலைப்பட தேவையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அசாம் மாநிலத்தில் கடுமையான வன்முறைகள்  நடந்து வரும் நிலையில் பிரதமர் இவ்வாறு தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேறியுள்ளது. இந்நிலையில்  அசாம் மாநிலம் உள்ளிட்ட வட கிழக்கு மாகாணங்களில் பதற்றம் நீடித்து வருகிறது .  பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.   புதிய குடியுரிமை  சட்டத்தால் அசாம் குடிமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது .  எனவே நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர் .  

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து அசாமில் உள்ள சகோதர சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உறுதியளிக்கிறேன் .  உங்கள் உரிமைகள் தனிப்பட்ட அடையாளம் அழகிய கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் பறிக்க முடியாது .  அது உங்களது வளம் மற்றும் வளர்ச்சியை தொடரச் செய்யும்  என கருத்து தெரிவித்துள்ளார் .  பிரிவு 6 ன் அடிப்படையில்  அசாம் மக்களின் அரசியல் மொழியியல் கலாச்சாரம் மற்றும் நில உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படையில் பாதுகாக்க நானும் மத்திய அரசும் உறுதி பூண்டுள்ளது  என அவர்  அதில் தெரிவித்துள்ளார் .