சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயன்று வருகிறது. ஆனால் அம்மாநிலத்தில் உள்ள பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு செல்ல வந்தார். பம்பையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சபரிமலை செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சசிகலாவை கைது செய்தனர்.

சசிகலா கைது செய்யப்பட்ட தகவல் இந்து ஐக்கிய வேதி அமைப்பினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் பாஜகவினருடன்  இணைந்து போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக  மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு அமைப்பினர் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிலையில் கோழிக்கோட்டில் வசித்து வரும் ஆசியா நெட் பத்திரக்கையாளர் சானியோவும் அவரது கணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்களது உறவினர் ஒருவரை பார்க்க சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை ஐக்கிய வேதி அமைப்பினரும், சில வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவர்களும் கடுமையாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர் . இதையடுத்து அவர்கள் இருவரும் காயங்களுக்கு சிகிச்சை பெற அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்றனர்.

அப்போதும் அங்கு வந்த இந்து அமைப்பினர் மீண்டும் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு போலீசாரும் இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குள் தப்பிச் சென்று ஒளிந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.