புகழேந்தி கர்நாடகாவில் கட்சியை வளர்க்கும் பணியை மட்டும் பார்க்கட்டும் என்றும், தமிழகத்தில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது  என தெரிவித்த ஆறுக்குட்டி எம்எல்ஏ, அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சாப்பாடு வாங்கித் தரும் வேலையை தாராளமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்து வந்த  ஆதரவை விலக்கிக்கொள்வதாக டி.டி.வி.ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏ.க்கள் அறிவித்து உள்ளனர்,  இதற்கான கடிததத்தையும் ஆளுநரிடம் அவர்கள் வழங்கி உள்ளனர்.

மேலும் அதிமுகவில்  இருந்து நிர்வாகிகள் பலரை நீக்குவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆறுக்குட்டி எம்எல்ஏ, தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தார்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருப்பவர்களை, ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் நீக்க அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் கட்சியை வளர்க்கும் வேலையை பார்க்காமல் புகழேந்தி, தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புகழேந்தி தமிழ்நாட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்தால் போதும் என்றும்,  இல்லையென்றால் கர்நாடகாவுக்கு சென்று, சிறையில் உள்ள சசிகலாவுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் வேலையை பார்க்கட்டும் என கடுமையாக விமர்சனம் செய்தார்.