முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியில் இருந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ, சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது  இல்லத்தில் நேரில் சந்தித்து முறைப்படி இணைந்தார்.

சசிகலா – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிளவை அடுத்து ஓபிஎஸ் தலைமையில் புது அணி உருவானது. அவருக்கு ஆதரவாக 12 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

இந்நிலையில்  ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த கோவை - கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். வேறு அணிக்கு மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் இன்று காலை முதலமைச்சர் பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த ஆறுக்குட்டி, முறைப்படி அவரது அணியில் இணைந்துள்ளார். 

இதற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணிக்கு மாறி வந்த நிலையில், முதல் ஆளாக ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஒருவர், எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்துள்ளார். 

முதல் ஆளாக ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியதை அடுத்து, தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆறுக்குட்டி எம்எல்ஏ, மக்கள் விருப்பத்தின் பேரிலேயே அணி மாறி உள்ளதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் கூட எடப்பாடி பழனிசாமி அரசை பாராட்டி உள்ளதாகவும் கூறினார்.

எடப்பாடி  பழனிசாமி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் .. தொகுதி மக்களுக்காகவே அணி மாறினேன் எனவும் ஆறுக்குட்டி தெரிவித்தார்.