வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை கைது செய்து அதிமுக அரசு சிறையில் அடைப்பது கண்டனத்திற்கு உரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த 63 நாட்களாக புதுதில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் பிடிவாதப் போக்கின் காரணமாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் விவசாயிகளின் அடையாளமாக விளங்கும் டிராக்டர் அணிவகுப்பு நடத்திட விவசாயிகள் போராட்டக்குழு அறைகூவல் விடுத்திருந்தது. இதையேற்று தமிழ்நாட்டில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்திட அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின விழா முடிந்தற்குப்பிறகு அமைதியாக பேரணி நடத்திட, காவல்துறை அனுமதி மறுத்து தடை விதித்தது. கொரானா நோய்த்தொற்று மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணங்களைக் கூறி ஜனநாயகத்திற்கு விரோதமாக அனுமதி மறுத்தது. 

நேற்று (26.01.2021) பெரும்பாலான மாவட்டங்களில் காவல்துறையினரின் தடையை மீறி டிராக்டர் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாடு முழுவதும் நேற்று பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் மீது காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் திரு. எஸ்.தம்புசாமி, திமுகவைச் சேர்ந்த திரு. பாரதி, திரு. துரை உட்பட 5 பேரை விடியற்காலை 5 மணிக்கு அவரவர் வீடுகளில் வைத்து காவல்துறை கைது செய்துள்ளது. கொலை முயற்சி உட்பட பிணையில் வெளிவர முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு புனைந்து அடக்கு முறையை ஏவி சிறையிலடைத்துள்ளது. இன்னும் பலரை கைது செய்யும் நோக்கத்துடன் காவல்துறை தேடி வருகிறது. தமிழக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

போராடும் விவசாயிகள் மீது வழக்கு தொடுத்து, கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முறியடித்துவிடலாம் என்பது அதிமுக அரசின் பகல் கனவாகவே முடியும். தமிழக காவல்துறை விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மற்றும் கூட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுத்து பாரபட்சமாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், விவசாயிகள் போராட்டத்தையொட்டி போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. காவல்துறையினரின் அடக்குமுறை, அராஜகம், பொய்வழக்கு ஆகியவற்றிற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டனக்குரல் எழுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்.