புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை நேற்றுமுன்தினம் இரவில் இருந்து காணவில்லை. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடிவந்தனர்.

அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிறுமி பாலியல் கொலையை கண்டித்து திமுக எம்பி கனிமொழி  நடிகை வரலட்சுமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக எம்பி கனிமொழி:
"அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். நாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் தடுக்கப்படுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்". எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி:
அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில்.. "மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்".