திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தில் இருந்து ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளார்.

ப.சிதம்பரம் சிவகங்கையில் தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை களமிறக்க திட்டமிட்டு இருந்தார். அவர் மீது சில வழக்குகள் இருப்பதாலும், கடந்த முறை தோல்வியை தழுவியதாலும், இம்முறை கடுமையான போட்டி நிலவுவதாலும் தனது மருமகளும்  கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி கார்த்தியை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.  ப.சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி, சென்னை அப்போலோவில் மருத்துவராக பணிபுரிந்தபோது அப்போலோவின் சமூக வலைதளத்தைக் கையாளும் பொறுப்பையும் கவனிதவர். அந்த அனுபவத்தை வைத்து தற்போது சிவகங்கை தொகுதியில் காங்கிரஸின் சமூக வலைதள பிரச்சாரத்தைக் கையிலெடுத்து இருக்கிறார்.

 

ஸ்ரீநிதியின் யோசனைப்படி, தொகுதியில் 5 பூத்களுக்கு ஒரு வாட்ஸ் - அப் அட்மினை நியமித்திருக்கிறார்கள். இந்த அட்மின்கள் தங்களது எல்லைக்குள் எத்தனை வாட்ஸ் - அப் குரூப்களை வேண்டுமானாலும் அமைக்கலாம். இந்த அட்மின்களுக்குச் சென்னையிலிருக்கும் கார்த்தியின் அலுவலகத்திலிருந்து அவ்வப்போது செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

 

அந்தச் செய்திகளை உடனுக்குடன் மற்ற குழுக்களுக்குப் பரப்புவதுதான் அட்மின்களின் வேலை. இப்படியொரு யோசனையை ஸ்ரீநிதி அமல்படுத்த, “சமூக வலைதளத்தில் யார் அதிகப்படியான குழுக்களை ஆரம்பித்து  திறமையாகப் பணியாற்றுகிறார்களோ அவர்களுக்குத் தேர்தல் முடிந்ததும் ஜாக்பாட் காத்திருக்கிறது” என்ற உற்சாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீநிதி கார்த்தி. மருத்துவரான ஸ்ரீநிதி கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.