தமிழக பிஜேபிக்கு இளைஞர் ஒருவர் தான் தலைவர்! உறுதி செய்த அமித் ஷா...!
அந்த வகையில் நீண்ட தேடலுக்குப் பிறகு மோடி, அமித் ஷாவின் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளவர் தான் கோவையைச் சேர்ந்த ஏ.பி. முருகானந்தம்.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைமை பொறுப்பு இன்னும் காலியாகவே உள்ளது. மாதக்கணக்கில் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டு மத்திய பாஜக தலைமை இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோன்று ரஜினியின் அரசியல் வருகை மற்றும் அரசியல் கணக்கீடுகளை கருத்தில் கொண்டு தலைவரை நியமிக்கலாம் என்று பொறுத்திருந்து பார்த்ததில், ரஜினி தரப்பில் இருந்து எந்த கிரீன் சிக்னலும் இல்லாததால், புதிய தலைவரை அறிவிக்கும் மூடுக்கு மத்திய தலைமை வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், கே.என். லட்சுமணன் என பல பிஜேபி முக்கிய பிரமுகர்கள் தலைவர் பதவியை வகித்துவிட்டார்கள். ஆனாலும் கட்சி வளர்ச்சியில் எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை. "தாமரை மலர்ந்தே தீரும்" என தொண்டை தண்ணீர் வற்ற கூக்குரலிட்டும், கிராமம், நகரம், மாநகரம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று ரவுண்டு கட்டி அடித்தாலும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காண்பிக்க முடியவில்லை.
எனவே தான் நடிகர் வடிவேலு பாணியில் "ஆணியே பிடுக்க வேண்டாம்" என்ற ரீதியில் பழைய தலைகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு அல்லது அவர்களுக்கு தகுதியான பதவியை வேறு விதத்தில் வழங்கி கொள்ளலாம் என்று தலைமை முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஒரு புதிய முகத்தை கொண்டு வருவதோடு மோடி மற்றும் அமித் ஷா இருவரின் கட்டளைகளுக்கு அடிபணிவதோடு மட்டுமல்லாமல், கோடு போட்டால் ரோடே போடக்கூடிய ஆள் தன வேண்டும் என பிஜேபி தலைமை தேடி வந்தது. அந்த வகையில் நீண்ட தேடலுக்குப் பிறகு மோடி, அமித் ஷாவின் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளவர் தான் கோவையைச் சேர்ந்த ஏ.பி. முருகானந்தம்.
1996ல் கோவை குண்டு வெடிப்பு சமயத்தில் அத்வானியோடு சேர்ந்து உயிர்தப்பியவர் தான் இந்த முருகானந்தம். அப்போதே பிஜேபி தலைமையால் கவரப்பட்டு, டெல்லிக்கு சென்றுவிட்டவர் இவர். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அபரிமிதமான புலமை கொண்ட இவர். மோடி மற்றும் அமித்ஷாவிடம் பிரச்சனைகளை விவரிப்பதில் வல்லவராம். அதுமட்டுமின்றி, பிரச்சனைகளுக்கான தீர்வையும் சம்பவ இடத்திற்கே சென்று தங்கி, அதற்கான அப்டேட்டுகளையும் சரியான விதத்தில் தலைமைக்கு அளிப்பாராம்.
அந்தவகையில் தான் மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முருகானந்தம் மேற்கொண்ட தொடர் முயற்சி காரணமாக, தற்போது அங்கு பிஜேபிக்கு பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். திரிணாமூல் காங்கிரஸில் மம்தா ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் பிஜேபி சார்பில் முருகானந்தம் படத்தை அட்டையில் பிரசுரிக்கும் அளவிற்கு வங்க மொழி பத்திரிகைகளில் பிரபலமானவர் ஆவார் இவர். அதுமட்டுமின்றி கடந்த ஓராண்டு காலமாக கேரளாவில் இவர் பிஜேபிக்காக செய்து வந்த வேலைகள், அங்கு களத்தில் கட்சிக்கு ஆதரவாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பார்த்து அமித்ஷாவே வியந்து போனாராம்.
ஏ.பி.முருகானந்தம் தற்போது அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். பூனம் மஹாஜன் இளைஞர் அணி தலைவராக உள்ளார். இதுமட்டுமின்றி தேசிய பாஜக போராட்டக்குழு தலைவராகவும் முருகானந்தம் பதவி வகிக்கிறார். மேலும் மோடியின் கனவு திட்டமான மேக்இன் இந்தியாவிலும் பொறுப்புவகிக்கிறார். தேசிய துணைச் செயலாளராக இருக்க கூடிய ஹெச்.ராஜா அல்லது முருகானந்தம் இருவரில் ஒருவர் தான் தமிழக பாஜகவின் தலைவர் என ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பேச்சு அடிப்பட்டு வருகிறது. இறுதியில் இந்த ரேஸில் முருகானந்தமே வெற்றி பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.