அதிமுகவில் மாநிலங்களவை பதவி யாருக்கெல்லாம் ஒதுக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்தப் பதவியை தனக்கு வழங்கும்படி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை மனு அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தில் அடுத்த மாதம் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் காலியாகின்றன. அதிமுகவுக்கு 4 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய சபையில் பலம் இருந்தது. ஆனால், இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதால், அதிமுகவால் 3 உறுப்பினர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு பதவியை பாமகவுக்கு வழங்குவதாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக உடன்பாடு காணப்பட்டது.  உள்ளாட்சி தேர்தலிலும் பாமகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதால், ஓரிடத்தை வழங்க வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது.

 
எஞ்சிய இரு இடங்களைப் பிடிக்க அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மைத்ரேயன், கோகுல இந்திரா,  தன் சகோதருக்காக சிவி சண்முகம், மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்தப் பட்டியலில் தற்போது முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவும் சேர்ந்துள்ளார். தனக்கு மாநிலங்களவை பதவியைக் கேட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை கடிதமே கொடுத்துவிட்டதாக அதிமுகவில் பேசப்படுகிறது.


முதல்வரிடம் தந்துள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களும் வெளியே தெரியவந்துள்ளது. அதில், “ மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் எனக்கு வாய்ப்பளிக்க நீங்கள் நினைத்திருந்தீர்கள். இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் என்னால் போட்டியிட முடியவில்லை. அதற்கு பதிலாக மாநிலங்களவை பதவியை எனக்குத் தர வேண்டும்.
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களில் முக்குலத்தோர், இஸ்லாமியர், தலித், யாதவர் போன்ற சமுதாயத்தினர் அதிகம் வாழ்கின்றனர். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அன்பழகன், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மலைச்சாமி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நிறைகுளத்தான், யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த கோகுல இந்திரா ஆகியோர் கடந்த காலங்களில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் இதுவரை மாநிலங்ளவை பதவி வழங்கப்படவில்லை. எனவே, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும்.” இவ்வாறு கடிதத்தில் அன்வர்ராஜா கூறியிருக்கிறார்.