சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக சாத்தூரை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி கடந்த 17ம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. விருதுநகரில் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் மாறிமாறி சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, கேரளா, கோவை, மதுரை போன்ற பல்லேறு பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சைபர் கிரைம் போலீசார் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் உள்ளிட்ட 600 பேரின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி தனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக சாத்தூரை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். விருதுநகர் எஸ்.பி.க்கு வந்த புகாரில் முகாந்திரம் உள்ளாதா என காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி திமுக மற்றும் தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலினை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
