கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர் அண்ணாமலை. கர்நாடகாவில் 9 ஆண்டுகளாக ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய அண்ணாமலை, கடந்த ஆண்டு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். கோவை, கரூர் பகுதியில் தற்சார்பு விவசாயம் செய்யப்போவதாகவும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி தொடங்க உள்ள கட்சியின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல்களும் வெளியாயின. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து பாஜகவில் இணையவில்லை என்று பேட்டி அளித்த அண்ணாமலையை பாஜக மாநில துணைத் தலைவராக நியமித்துள்ளார் மாநில தலைவர் எல்.முருகன்.

 
அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தது முதலே சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சிலர் வைத்துவருகிறார்கள். அவருடைய படிப்பு, அவர் பெற்ற மதிப்பெண்கள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில், “தன்னைப் பற்றி புத்தகம் வெளியிடப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுதான் ஐபிஎஸ் தேர்வில் வெற்று பெற்று பொறுப்புக்கு வந்தேன். கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ்தான் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியற்றினேன். பாஜக ஆட்சியில் 4 நாட்கள்தான் பணி செய்தேன். என்னுடைய கடந்தகால சாதனைகளைப்பற்றியெல்லாம் நான் பேசவில்லை. என்னைப் பற்றி வரும் தகவல்களைப்பற்றி சொல்ல விரைவில் எனது வாழ்க்கையை புத்தகமாக விரைவில் வெளியிட இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.