நீட் தேர்வை ரத்து செய்ய திமுக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லையென்றும் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ரத்து செய்ய திமுக,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. சட்ட பேரவையில் மூன்று முறை நீட் தேர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு முறையும் நீட் தேர்வு தொடர்பான தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் மீண்டும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு தமிழக ஆளுநர் இன்னும் அனுப்பிவைக்காமல் உள்ளார். இதனையடுத்து இந்த மசோதா மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தமிழக ஆளுநரை சந்தித்து இன்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நீட் தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என திமுக தொடர்ந்து பொய் பேசி வருவதாகவும் டிராமா நடத்தி வருவதாகவும் கூறினார். நீட் தேர்வு யாருக்கும் எதிரானது இல்லையென்று தெரிவித்தவர், குறிப்பாக ஏழை,எளிய மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிரானது இல்லையென்றும் குறிப்பிட்டார். நீட் தேர்வு தொடர்பாக பல முறை விளக்கம் அளித்து விட்டதாக தெரிவித்தவர், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றால் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுங்கள் என தமிழக அரசிடம் கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லையென தெரிவித்தார். திமுக அசு ஒரே பொய்யை திரும்ப,திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடாது என தெரிவித்தவர், எனவே தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் அதில் மாற்று கருத்து இல்லையென கூறினார்.


திமுக,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் நீட் தேர்வில் அரசியல் கட்சிகள் டிராமா நடத்திவருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.