அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யனும்..! ஆளுநரிடம் மனு அளிக்கும் அண்ணாமலை
கள்ளச்சாரய மரணம், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி உள்ளிட்ட புகார்களை அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி ஆளுநர் ரவியிடம் வருகிற 21 ஆம் தேதி மனு அளிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மோடியின் 9 ஆண்டு சாதனை
பாஜக மாநில செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்துவிட்டு, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எனவும் அதை வருகின்ற மே 30 ம் தேதி முதல் ஜீன் 30 ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பாஜக கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆளுநரோடு 21 ஆம் தேதி சந்திப்பு
கள்ளச்சாரயம் பட்டிதொட்டி எங்கும் புழங்க ஆரம்பித்துள்ளதாகவும், இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை மாவட்ட தலைநகரங்களில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டம் மாநில அரசிற்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வெள்ளம் போல சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது . இன்னொரு பக்கம் அதற்கு அடிமையானவர்கள் கள்ளச்சாரயத்தின் பக்கம் தள்ளப்பட்டுள்ளார்கள், இந்த இரண்டையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கள்ளச்சாரயத்திற்கு ஆளுநர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாஜக குழுவினர் மனு அளிக்க உள்ளதாக கூறிய அவர் இதற்காக பாஜக குழு ஆளுநரை வருகிற 21 ஆம் தேதி சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்திடுக
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், செந்தில் பாலாஜியை நீக்க கோரி முதலமைச்சருக்கு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளதாகவும் கூறினார். உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் அமைச்சராக தொடர்வது முடியாது என தெரிவித்தார். திமுக அரசு தமிழகத்தை குடிகார மாநிலமாக்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். டாஸ்மாக்கை கட்டுப்படுத்தினால், கள்ளச்சாரயம் கட்டுப்படுத்தப்படும் எனவும் அண்ணாமலை கூறினார்.
இதையும் படியுங்கள்
திமுகவின் உயர்நிலை செயல் திட்டகுழு கூட்டத்திற்கான தேதி திடீர் மாற்றம்.! என்ன காரணம் தெரியுமா.?