அ.தி.மு.க. கூட்டணி பால் போன்றது. ஒரு துளி விஷம் கலந்தால் கூட பாலின் தன்மை கெட்டுப்போய்விடும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி. (பால்-ன்னா எப்படிண்ணே, பசும்பாலா, இல்ல எருமப்பாலா, ஆட்டுப்பாலா இல்ல நாட்டுமாட்டுப்பாலா? தண்ணீர் கலந்ததா இல்லே கலக்காததா, லிட்டர் என்ன விலைக்கு வாங்குறீங்க, லிட்டர் என்ன விலைக்கு கொடுக்குறீங்க, வெண்ண, தயிர் தயாரிக்க செட்டாகுமான்னு சொல்லிக் கொடுங்க. இப்படி மொட்ட கட்டையா பேசுனா எப்பிடி?)

* வெறும் தேர்தலுக்காகத்தான் பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு அரசாங்கங்களின் மத்திய, மாநில ஆட்சிகளை மக்கள் விரும்பவில்லை: இ.கம்யூனிஸ்ட் நல்லகண்ணு. (தலைவரே, அவிய்ங்கள விட்டுத்தள்ளுங்க. மக்களால் நாங்க, மக்களுக்காக நாங்கோன்னு ஜெயலலிதாவுக்கு முன்னேயே ஜனநாயக  டயலாக் விட்ட உங்க கட்சிகள் ரெண்டையும் மக்கள் கவுன்சிலர் பதவிக்கு கூட விரும்புறதில்லை. இதுக்கு என்ன காரணமுன்னு ஒடச்சு சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும்.)

* எந்த தொகுதிகளில் நாங்கள் நிற்பது என்பதி குறித்த எங்கள் கட்சியின் பேச்சுவார்த்தை அறிவாலயத்தில் தி.மு.க.வுடன் மிக சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது: கே.எஸ்.அழகிரி. (எல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கிற வரைக்கும்தான் இப்படி ஏஸி ரூமுக்குள்ளே காஃபி, டீ, பக்கோடா, வறுத்த முந்திரி சாப்பிட்டுக்கிட்டு கதையடிக்கிறதெல்லாம். அப்புறம் வெயிலோடு வெளயாடி, வெயிலோடு உறவாடி பிரசாரம் பண்ணணும்ணே.)

* எவ்வளவோ இறங்கிவந்து மற்ற கட்சிகளுடன்  கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ் கட்சி, ஏன் த.மா.கா.வுடன் பேச மறுக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக எப்பவோ பிரிந்து போனவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனும் மனப்போக்கு காங்கிரஸிடம் சுத்தமாக இல்லை: ஞானதேசிகன். (இதை விட மோசமா இறங்கிவந்து யாரும் அழுதுட முடியாது ராகுல்ஜி. வாசன நினைச்சா அய்யோ பாவமா இருக்குது. எந்தளவுக்கு லோன்லி ஃபீலிங்கு ஆட்டிப்படைச்சுதுன்னா, இப்படி ஞானத்தை விட்டு புலம்ப விட்டிருப்பாரு! கொஞ்சம்  யோசிங்க.)

* மக்களுக்காகப் போராடும் எங்களை மாதிரியான நபர்களை மீண்டும் மீண்டும் இரண்டு பெரிய கட்சிகளில் ஒருவருடன் கூட்டு வைக்கவே மக்கள் தூண்டுகிறார்கள். ஒரு விவசாயியையோ, அல்லது ஒரு நேர்மையான இளைஞரையோ தலைவராக ஏற்க மறுக்கிறார்கள்: த.வா.க. வேல்முருகன். (அட்ரா சக்க! அட்ரா சக்க! அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியில ஒத்த சீட்டுக்கோ அல்லது ஆதரவு தெரிவிச்சு ஆதாயம் பெறுவதற்கோ ரெடி!ங்கிறதை அண்ணன் எம்பூட்டு அழகா மக்கள் தலையில ஏத்தி அம்சமா வெளிபடுத்துறாருன்னு பாருங்க. கத்துக்கணும் தம்பி இவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.)