தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால் லண்டனில் இருக்கிறார். அவர் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்

13 அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டு இருப்பதை அறிந்து தான் மிகவும் வேதனை அடைந்தாக கூறினார். ஆனால், இந்த சம்பவம் தங்களது ஆலையில் இருந்து சில கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நடந்த்து என்றவர் எங்களது வேதாந்தா நிறுவனம் மனிதாபிமான விவகாரங்களில் பொறுப்புள்ள இந்திய தொழில் நிறுவனம் ஆகும். நாங்கள் இதில் உயிர் இழந்தவர்கள் குடும்பம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் எனக் கூறினார்.

எங்கள் ஆலையில் இருந்து 5 கி.மீட்டருக்கு அப்பால் துப்பாக்கி சூடு நடந்து . மே 22-ந் தேதி ஏதோ நடக்கப் போகிறது? என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதனால்தான் கோர்ட்டை அணுகினோம். கோர்ட்டு உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் கூறி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தது. அதன்படி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை எந்த தனி அமைப்புகள் வேண்டுமானாலும் நிரூபித்து காட்டட்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் நிறுவனம் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி நடத்தப்படுகிறது. எந்த கழிவுகளும் ஆலையில் இருந்து வெளியேறுவதில்லை. எந்த ஒரு தனி அமைப்பும் ஆய்வு செய்து பார்க்கட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம் எனத் தெரிவித்த்தார்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை நாங்கள் கடுமையாக கடைபிடிக்கிறோம். எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்பதை நிரூபிக்க எங்களிடம் போதுமான தகவல்களும், ஆய்வு அறிக்கைகளும் உள்ளன. தேவை என்றால் எந்தவொரு இந்திய அமைப்போ, அல்லது வெளிநாட்டு அமைப்போ ஆய்வு செய்து பாதிப்பு இருக்கிறது என்பதை நிரூபிக்கட்டும் என்று கூறினார்.

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம். இதில், சில சக்திகள் தூண்டுகோலாக இருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த சக்திகள் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

நாங்கள் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக ஆலைக்கு வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தோம். அதுபோல் பல தலைவர்களையும், போராட்ட அமைப்பினரையும் அழைத்தோம். ஆனால், யாரும் உள்ளே வந்து பார்வையிடவில்லை. தூத்துக்குடி மக்களுக்கு இதுபற்றிய அனைத்து விவரங்களையும் தருவதற்கு தயாராக இருக்கிறோம் என அறிவித்தவர்

தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் யாரையும் நோக்கி கைகாட்ட விரும்பவில்லை. இந்த போராட்டக்காரர்களால் என்ன நடக்கும்? என்பது யாரும் எதிர்பார்க்காதது. போராட்ட குழுவில் பல அமைப்பினர் உள்ளனர். அவர்களில் பலர் எங்களை சந்தித்து உரிய விளக்கங்களை பெற தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களை சிலர் தடுக்கிறார்கள். எங்களை பொருத்த வரை நாங்கள் தொழில் செய்கிறோம். நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறோம்.

எங்களுக்கு அரசின் உறவு வலுவாக தேவை. அதே நேரத்தில் எங்கள் தொழிலை அரசியலுக்கு அப்பால் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வர்த்தகத்தை அரசியலோடு கலந்தால் அது வெற்றிகரமாக அமையாது என்றார் .

இந்தியாவில் எங்களோடு சேர்த்து 3 ஆலைகள் உள்ளன. இந்துஸ்தான் காப்பர், பிர்லா காப்பர் ஆகிய நிறுவனமும் செயல்படுகின்றன. நாங்கள் 20 ஆண்டுகளாக ஆலையை நடத்தி வருகிறோம். ஆலை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட காற்றின் தரம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது. அதேபோல் நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்துள்ளது. நாங்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குகிறோம். உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கு மட்டும் நாங்கள் ரூ.500 கோடி வரை செலவு செய்து இருக்கிறோம் எனக் கூறினார் அனில் அகர்வால்