முதலில் 3,448 மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்தும், முதலில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மதுக்கடைகள் செயல்படும். பின்னர், காலை 11 மணி முதல் 7 மணி வரை என மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படும். ஓராண்டு முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடப்படும்  என அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்பால் தெறிக்கவிடுகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஜெகன் மோகனின் இந்த பிளான் பற்றி ஆந்திர துணை முதல்வர் கே.நாராயணசாமி கூறுகையில்; கடந்த மே மாதம் 30-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்ற திலிருந்து, அனுமதியில்லாமல் செயல்பட்ட 43,000  கடைகளை அதிரடியாக தூக்கினோம். மதுவை முற்றிலும் அகற்றும் வகையில், 475 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தியது. இப்போது, அனைத்துக் கடைகளையும் அரசு நடத்தப்போகிறது. அடுத்து நேரம் குறைக்கப்படும் பின்னர், படிப்படியாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு முற்றிலும் மதுவிலக்குக் கொண்டுவரப்படும்.

தெலுங்கு தேச அரசு சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுக்கத் தவறிவிட்டது. இதனால், ஆந்திராவில் மது அருந்தும் போக்கு அதிகரித்து, லட்சக்கணக்கானோர் உயிரை இழந்துள்ளனர். இதனால், பெண்கள் மதுக்கடைகளை மூடவேண்டுமென்று முதல்வரிடத்தில் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி மது இல்லாத மாநிலமாக ஆந்திராவை மாற்றுவோம் என்று ஜெகன் மோகன் ரெட்டி பிரச்சாரத்தின் போதே தெரிவித்துள்ளார்.

இதற்காக ஏ.பி.பிவரேஜஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு  ஆந்திராவில் செயல்படும் 3,448 கடைகளையும் குத்தகைக்கு எடுத்து நடத்தும் இந்த நிறுவனம். முதலில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மதுக்கடைகள் செயல்படும். பின்னர் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை என திறக்கப்படும் நேரம் குறைக்கப்படும். 3,500 மேலாளர்கள் 8,000 விற்பனையாளர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.

மதுக்கடைகளை நிரந்தரமாக மூடும் வரை இவர்கள் கண்காணிப்பில் கடைகள் நடத்தப்படும். அதேபோல இரவு நேரத்தில் மது விற்பனையைத் தடுக்க ஒவ்வொரு கடைக்கும் காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள். கடைசியாக ஒவ்வொரு மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையிலும் மது மீட்பு மையம் அமைக்கப்படவுள்ளது என்றார். முதலமைச்சராக முன் அனுபவமும் இல்ல,  ஆட்சிக்கு வந்து ஆறு மாசம் கூட ஆகல, ஆனாலும் நாளுக்கு நாள் புதுசு புதுசாக அசத்துறீங்களே  ஜெகன் காரு என சவுத் முதல் சென்ட்ரல் வரை பாராட்டு  குவிந்து வருகிறது.