Anbumani Will Be The Next CM
100 தொகுதிகளில் தொகுதிக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பாமக அடிப்படை உறுப்பினர்களைச் சேர்த்துக் கட்சியைப் பலப்படுத்தி எதிர்வரும் எந்த ஒரு தேர்தலையும் சந்திக்கவும் தயார் என்று பாமக மாநிலத் துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியல் தீர்க்கதரிசி. 1996இலிருந்தே ஊழலை ஒழிக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் முயற்சி எடுத்து அதற்கான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த அரும்பாடுபட்டுவருகிறார்.
அரசியல் சூழ்நிலையின் நெருக்கடியால் அந்தக் கனவு நிறைவேறக் கால தாமதம் ஆகிவருகிறதே தவிர அந்த நோக்கத்தைக் கைவிட்டுவிடவில்லை. காலத்தால் அது கனிந்துவருகிறது. ஆனால் தற்போது மக்களே திமுக - அதிமுகவை வெறுத்து ஒதுக்கி மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிற இந்த நேரத்தில் டாக்டர் அன்புமணி அவர்களின் திசை நோக்கி அனைத்துத் தரப்பு மக்களும் திரும்புகிற சூழலில் அதைத் தடுக்க அரசியல் சதியைச் சிலர் பின்னத் தொடங்கிவிட்டார்கள்.
டாக்டர் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்று பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்த பிறகு தனித்துப் போட்டியிட்ட பாமக 6% வாக்குகளைப் பெற்றும், 64 தொகுதிகளில் திமுகவைத் தோற்கடித்தும், பல தொகுதிகளில் 500 , 1000 வாக்குகளில் மட்டுமே பாமக வெற்றி வாய்ப்பை இழந்தும், பல தொகுதிகளில் திமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியும் தமிழகத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது.
100 தொகுதிகளில் தொகுதிக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பாமக அடிப்படை உறுப்பினர்களைச் சேர்த்துக் கட்சியைப் பலப்படுத்தி எதிர்வரும் எந்த ஒரு தேர்தலையும் சந்திக்கவும், வெற்றி பெறவும் தயார் நிலையில் உள்ள பாமகவை பலவீனப்படுத்த திமுகவுடன் கூட்டணி என்ற செய்தியை, வதந்தியைப் பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பலவீனமான நேரங்களின் போது திமுக - அதிமுக இரண்டு கட்சிகளும் பாமகவைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததையும், தங்களின் வாக்கு வங்கியின் சரிவைச் சமன் செய்துகொண்டதையும் மக்கள் அறிவர். கடந்த காலத்தில் திமுக - அதிமுகவோடு கூட்டணி அமைத்தமைக்கு பாமக மக்களிடம் பகிரங்கமான மன்னிப்பைக் கேட்டிருக்கிறது.
எனவே திமுகவோடு கூட்டணி என்ற செய்தியை மறுக்கிறோம். பாமகவைத் திட்டமிட்டுக் குழப்ப யாரோ செய்கின்ற சதி என்பதை உணர்ந்து மருத்துவர் அவர்கள் சொல்லே நமது வேத வாக்கு என்பதால் பாமகவினர் வதந்திகளுக்குள் நமது கவனத்தைச் செலுத்த வேண்டாம். கட்சியின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டங்களில் அறிவித்தபடி நமது கட்சிப் பணிகளைத் திட்டமிட்டு செவ்வனே செய்வதில் கவனம் செலுத்துவோம்.
எனவே பாமக கிங் மேக்கராக (ஆட்சியை உருவாக்கும் கட்சியாக) இருக்காது. கிங்காக (முதல்வராக) உருவெடுக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார் பொங்கலூர் மணிகண்டன்.
மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் பொங்கலூர் மணிகண்டன் டாக்டர் ராமதாஸிடம் அனுமதி பெற்றுவிட்டுத்தான் இப்படி அறிக்கை விட்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பாமகவினரை மண்டை காய விட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
