தமிழகத்தின் இருண்ட காலம் இது என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சசிகலா முதல்வராவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தோ்ந்தெடுக்கப்பட்டார். நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களால், சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து நாளை தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் இருண்ட காலம் என தெரிவித்தார்.

மக்கள் பன்னீர் செல்வத்திற்கோ, சசிகலாவிற்கோ ஓட்டு போடவில்லை எனவும் ஜெயலலிதாவையே முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள் எனவும் தெரிவித்தார். சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக அதிமுக தேர்ந்தெடுப்பது அவர்களது உள்கட்சி விவகாரம் எனவும், ஆனால் முதல்வரை மக்களின் விருப்பபடியே தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஜெயலலிதா ஆட்சியமைத்த காலங்களில் தனக்கு பிறகு சசிகலா தான் கட்சியை வழிநடத்துவார் என உறுதியளித்தது கிடையாது எனவும், அதிமுகவின் இக்கட்டான காலங்களில் பன்னீர்செல்வமே ஆட்சியை நிர்வகித்தார் எனவும் குறிப்பிட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் இன்னும் ஒருவாரத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவித்த அன்புமணி, தீர்ப்பு வரும் வரை சசிகலா பதவி ஏற்க கூடாது எனவும், ஆளுநர் ஒருவாரகாலம் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.