அன்புமணியின் அந்த ஃபயர், ராமதாஸின் கலாய் போன்றவை கடந்த சில அறிக்கைகளில் மிஸ்ஸிங், அதுவும் அரசு சம்பந்தமாக வரும் அறிக்கைகளில் மட்டும் தான் அப்படி.

இந்நிலையில் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கை அநியாயத்து அதிமுக அரசை தடவிக் கொடுத்து ஊசி குத்தியிருக்கிறார் நம்ம சின்ன டாக்டர், அட ஆமாங்க... எதிர்க்கட்சி தலைவர்கள் ஜாக்ட்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிடும்போது அன்புமணியின் அறிக்கை அதற்கு அப்படியே ஆப்போஸிட்டாக இருந்தது  அரசு ஊழியர்களும் தங்களின் நிலையிலிருந்து இறங்கி வர வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப்பெற்று உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. அரசும், தொழிற்சங்கங்களும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போராட்டம் தொடர்வதுடன், மக்கள் மற்றும் மாணவர்களின் பாதிப்பும் அதிகரித்துள்ளது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வுக்கான 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே காணப்படும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இன்னும் கேட்டால் இக்கோரிக்கைகள் தீவிரம் அடைவதற்கு முன்பாகவே அக்கோரிக்கைகளை பா.ம.க. வலியுறுத்தியுள்ளது. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க தேர்தல் அறிக்கையில் இவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆட்சியாளர்களும் இந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். கடுமையான நிதி நெருக்கடி காரணமாகத் தான் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களும், தொழிற்சங்கத்தினரும் பேச்சு நடத்தினால் இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்பதால் உடனடியாக இரு தரப்பினரும் பேச்சு நடத்தும்படி  அய்யா அவர்கள் பலமுறை ஆலோசனை வழங்கினார். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆட்சியாளர்கள் அதை ஏற்று பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

மாறாக, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் ஒருபிரிவினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி இன்று வரை 9 நாட்களாக நீடிக்கும் வேலைநிறுத்தம் காரணமாக மாணவர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் செய்முறைத் தேர்வுகளும், இன்னும் சில வாரங்களில் எழுத்துத் தேர்வுகளும் தொடங்கவுள்ள நிலையில், போராட்டம் நீடித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அரசு நிர்வாகமும் முற்றிலுமாக முடங்கி விடும்.

மக்கள் நலனையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு அரசும், அரசு ஊழியர்களும் தங்களின் நிலையிலிருந்து இறங்கி வர வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப்பெற்று உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

தமிழக ஆட்சியாளர்களும் அதே நல்லெண்ண அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இரு தரப்புக்கும் ஏற்ற நாளில் பேச்சு நடத்தி சாத்தியமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தனது அறிக்கையில் பட்டும் படாமல் ஆனாலும் அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பயன்படுத்தவில்லை. இதை பார்த்த அரசியல் விமர்சகர்கள் பாமக அதிமுகவோடு கூட்டணி சேர தயாராகிவிட்டது என கமெண்ட்ஸ் அடிக்கின்றனர்.