anbumani statement about tasmac protest

மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, பெண்கள் மீது கொடுரமான முறையில் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை மதுக்கடைகளை காப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாமளாபுரத்தில் புதிய மதுக்கடை ஒன்றை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்தபோது அதைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். 

அதில் அப்பாவி ஒருவருக்கு மண்டை உடைந்துள்ளது. பெண் ஒருவரை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்ததில் அவரது காது பாதிக்கப்பட்டுள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம், குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று ஆணையிட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

அவர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு பதிலாக அவர்கள் மீது தடியடி நடத்தி மண்டையை உடைப்பதும், பெண்களை கன்னத்தில் அறைவதும் மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மதுவுக்கு எதிராக மீண்டும் ஒரு மக்கள் புரட்சி வெடிக்கும் முன் தமிழகத்தில் அகற்றப்பட்ட சாலையோர மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய திருப்பூர் நகர கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.