தனது எம்.பி. பதவியை முதல் ஆளாக ராஜினாமா செய்ய நான் ரெடி எனவும் ஆனால் மற்ற அதிமுக எம்.பிக்கள் வருவார்களா எனவும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்தும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக தமிழகத்தை சேர்ந்த திமுக மற்றும் அதிமுக MP-க்கள் இணைந்து நாடாளுமன்ற அலுவல்களை நடத்த விடாமல் முடக்கி வருகின்றனர். 

இதனிடையே காவிரி மேலான்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் அனைத்து கட்சி தலைவர்களை பார்க்க மறுப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மத்திய நீர்வளத்துறையிடம் ஆலோசனை நடத்துமாறு மத்திய அரசு கூறியதாக தெரிகிறது. இதைகேட்ட ஸ்டாலின், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அதிமுக எம்.பிக்களும், திமுக எம்.பிக்களும் சேர்ந்து பதவிகளை ராஜினாமா செய்ய சொல்வோம் என எடப்பாடியை வலியுறுத்தியதாக தெரிவித்தார். 

ஆனால் நேற்று மத்தியில்  4 மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், தனது எம்.பி. பதவியை முதல் ஆளாக ராஜினாமா செய்ய நான் ரெடி எனவும் ஆனால் மற்ற அதிமுக எம்.பிக்கள் வருவார்களா எனவும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்க மத்திய அரசு சில சூழ்ச்சிகளை செய்துவருவதாகவும் பாரதிய ஜனதா கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

மார்ச் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 30-ந் தேதிக்கு பின்னர் பா.ம.க தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 

காவிரி பிரச்சனைக்காக 56  மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும், 234 சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் தான் அரசியல் சாசன நெருக்கடி ஏற்படும் எனவும் சிறுவாணி அணையின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து நாளை தமிழக- கேரள எல்லை அட்டப்பாடியில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.