பாமாகவின் திட்டங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காப்பியடித்துக் கொண்டிருப்பதாகவும், திமுக, அதிமுக கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது என்றும் பாமக இளைஞர் அணி தலைவர அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 29-வது ஆண்டு விழா வேலூர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி பாமக மட்டும்தான் என்றார். திமுக, அதிமுகவிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பூரண மதுவிலக்கு, ஏரி - குளங்கள் தூர் வாறுதல் எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள். எங்களின் திட்டங்களைத்தான் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காப்பி அடித்துக் கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிலும், குறிப்பாக பா.ம.க.வின் திட்டத்தை திமுக அப்படியே பின்பற்றுகிறது என்றார். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரிது அறிக்கையைக் காப்பியடித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் போட்டி என்று கூறி வந்தார்கள். இப்போது, ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இடையே போட்டி என்று அவர்களாகவே சொல்லி வருகிறார்கள்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் போட்டி போட்டு தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வசனம் பேசுவதே வேலையாக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் ஒதுக்க வேண்டும்; அப்படி ஒதுக்கும்போதுதான், தமிழ்நாடடுக்கு விடுதலை என்றும் அந்த நாள் வெகு விரைவில் வரும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.